தவறான சிகிச்சைக்கு நீதி கேட்டு பெண் தொழிலாளி போராட்டம்
மூணாறு : தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு நீதி கேட்டு தேயிலை தோட்ட பெண் தொழிலாளி தொடர் போராட்டத்தை நேற்று துவக்கினார்.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான தேவிகுளம் எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்ட பெண் தொழிலாளி செல்வமணி 44. இவருக்கு மூணாறில் உள்ள டாடா மருத்துவமனையில் ஏப்.15ல் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பபை அகற்றப்பட்டது. அப்போது சிறுநீர் வெளியேறுவதற்காக இணைக்கப்பட்ட குழாய் மே 25ல் அகற்றினர். அதன் பிறகு சிறுநீர் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருந்ததால் பலமுறை சிகிச்சைக்கு சென்றும் பயனளிக்காததால் மருத்துவமனை நிர்வாகம் செல்வமணியை கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் பையில் ஆழத்தில் துளை இருப்பதாகவும், அந்த துளை டாடா மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. அதற்கு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை பெற்ற செல்வமணி டிச.19 ல் டாடா மருத்துவமனையை கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினார். தோட்ட நிர்வாகத்தினர், போலீசார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆகியோர் செல்வமணியின் கணவர் பாக்கியராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களின் வலியுறுத்தலுக்கு இணங்கி செல்வமணி போராட்டத்தை கைவிட்டார். அச்சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் நீதி கேட்டு நகரில் மகாத்மாகாந்தி சிலை முன்பு தொடர் போராட்டத்தை செல்வமணி நேற்று துவக்கினார்.