| ADDED : டிச 06, 2025 09:51 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தத்துடன் ஓட்டுவதால் ரோடுகளில் செல்வோர்கள் அச்சமடைகின்றனர். பெரியகுளத்தில் ரோட்டோர நடைபாதைகளில் மக்கள் நடந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி,கல்லூரி செல்லும் 18 வயதுக்கு கீழ் உள்ளஇளைஞர்கள் லைசென்ஸ் வாங்காமலும், டூவீலர்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் சைலன்சர்களை அதிக ஒலி ஏற்படுத்தும் வகையில் மாற்றி அமைத்து அதிக மக்கள் கூடும் பகுதிகள், தெருக்களில் செல்கின்றனர். ரோட்டில் செல்லும் கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியோர் பதட்டம் அடைகின்றனர். மகளிர் கல்லூரி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் இவர்களது முரண்பாடான போக்கு தொடர்கிறது. அதிரடி நடவடிக்கை தேவை கடந்தாண்டு தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே சிறுவன் ஒருவர் டூவீலரில் வேகமாக ஓட்டுவது, அதிக ஒலி எழுப்புவது என போக்கு காட்டிக்கொண்டிருந்தார். இதனை கண்ட தேவதானப்பட்டி போலீசார் டூவீலரை கைப்பற்றி, டூவீலரை சிறுவனிடம் கொடுத்த சிறுவனின் தாய்மாமா மீது வழக்கு பதிவு செய்தனர். இதே போல் அதிக வேகமாக மற்றும் சைலன்ஸர்களை மாற்றிய டூவீலர்களை கண்டறிந்தும், ரேஸ் டூவீலர்களை ஓட்டுபவர்கள் மீதும் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-