| ADDED : நவ 22, 2025 12:25 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துறை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க, நள்ளிரவில் பணம் வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குநராக இருப்பவர் சரவணபாபு. திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியில் உள்ள இவரது அலுவலகத்தில், நவ., 18ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது, அவரது இருக்கைக்கு எதிரே அலமாரியில் இருந்து, 2.24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 'என்னை யாரோ வேண்டுமென்றே பொய் புகாரில் சிக்க வைக்கின்றனர்' என, சரவணபாபு தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், திடீர் திருப்பமாக, தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள ஒரு வீட்டின் 'சிசிடிவி' காட்சிகள் கிடைத்தன. 18ம் தேதி அதிகாலை, முகமூடி அணிந்து டூ - வீலரில் வந்த மர்ம நபர், துணை இயக்குநர் அலுவலகத்தில் பணப்பையை வைத்து விட்டு மீண்டும் வெளியே வந்தார். இந்த காட்சிகளின் அடிப்படையில் துணை இயக்குநர் சரவணபாபு, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் அளித்தார். அதில், '18ம் தேதி அதிகாலை தன் அலுவலகத்திற்குள் வந்து சென்ற நபர் குறித்து விசாரிக்க வேண்டும்' என கோரியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.