| ADDED : டிச 27, 2025 04:16 AM
திருநெல்வேலி: மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முயன்ற போலீஸ்காரர் கடத்தி தாக்கப்பட்டார். திருநெல்வேலி தாலுகா போலீஸ் எஸ்.ஐ., நஸ்ரின் தலைமையில், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் தங்கப்பராஜா, கார்த்திக்ராஜா 26, நேற்று முன்தினம் இரவு அரியகுளம் விலக்கு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நொச்சிகுளத்தை சேர்ந்த தங்கராஜாவின் மகன் பாலசந்தர் 28, மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லுமாறு சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் கூறினார். பாலசந்தர் ஆட்டோ உடன், ஆயுதப்படை போலீஸ்காரர் கார்த்திக்ராஜாவை அனுப்பினார். ஆனால், ஆட்டோ புறப்பட்ட பிறகு பாலசந்தர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லாமல், தெற்கு அரியகுளம் நோக்கி திருப்பினார். தொடர்ந்து அலைபேசியில் பேசி தந்தை தங்கராஜா, சகோதரர் கனகராஜா 30, ஆகியோரை வரவழைத்தார். அங்கு வந்த மூவரும் சேர்ந்து போலீஸ்காரர் கார்த்திக்ராஜாவை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த பொதுமக்கள் போலீஸ்காரரை காப்பாற்றினர். உடனடியாக தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்ததும் தந்தை, மகன்கள் அங்கிருந்து தப்பினர். காயமடைந்த போலீஸ்காரர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலசந்தர், கனகராஜாவை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய தந்தை தங்கராஜாவை தேடி வருகின்றனர்.