| ADDED : ஜூலை 21, 2011 02:25 AM
திருநெல்வேலி : ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் குளறுபடிகள் ஏற்பட்டதாக ஆசிரிய, ஆசிரியைகள் புகார் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் அளிப்பது தொடர்பான கவுன்சிலிங் நேற்று நடந்தது. மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பரமராஜ் தலைமை வகித்தார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்த கவுன்சிலிங்கில் பட்டதாரி ஆசிரியர்கள், காப்பாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது.
இதில் தகுதியானவர்களுக்கு இடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.ஆனால் இக்கவுன்சிலிங் முறையாக நடக்கவில்லை என கூறி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும் போது, ''பணியிட மாறுதல் மூலம் கவுன்சிலிங்கிற்கு முன்பு காலியிடங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களில் தகுதியானவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிய பின்னரே பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். ஆனால் இதில் எந்தவிதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது'' என்றனர். இதனால் இக்கவுன்சிலிங்கில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், நேற்று மாலை வரை தொடர்ந்து இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இதில் தகுதியானவர்களுக்கு இடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.