சென்னை:போதைப்பொருள் கடத்திய வழக்கில், சென்னையைச் சேர்ந்த வாலிபர்கள் இருவருக்கு, தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை அருகே, போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு, கடந்த 2020 பிப்., 14ல் தகவல் கிடைத்தது.அதன்படி, ஆர்ம்ஸ் சாலையில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி, ஒருவரை பிடித்தனர். விசாரணையில் அவர், சவுகார்பேட்டை முருகப்பன் தெருவைச் சேர்ந்த மெஹுல் பாப்னா, 22, என தெரிந்தது.டூ - வீலரில் வந்து இவரிடம் பாலிதீன் பையை கொடுத்துவிட்டு தப்பியோடியவர், சாலிகிராமம் ஆற்காடு சாலையைச் சேர்ந்த அகில் அகமது, 22, என தெரிந்தது.பறிமுதல் செய்த பையில், 1.83 கிராம் எடையுள்ள '91 எல்.எஸ்.டி.,' என்ற போதைப் பொருள் இருந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் என்.பி.குமார், செல்ல துரை ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதி,'சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி, பின் கைதான அகில் அகமது, ஏற்கனவே 2019ல் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதானவர் என்பதை, அரசு தரப்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.