உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.3.18 கோடியில் உயர்மட்ட பாலம் 40 ஆண்டு பிரச்னைக்கு பிறந்தது விடிவு 30 கிராம மக்கள் மகிழ்ச்சி

ரூ.3.18 கோடியில் உயர்மட்ட பாலம் 40 ஆண்டு பிரச்னைக்கு பிறந்தது விடிவு 30 கிராம மக்கள் மகிழ்ச்சி

ராமாபுரம் ஓடை கால்வாய் மீது 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணி துவங்கி நடந்து வருகிறது. இதனால் 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர்.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ராமபுரம் ஊராட்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, ராமாபுரம் ஓடைக்கால்வாய். இந்த ஓடைக்கால்வாயில் ஆண்டு முழுதும் நீர் சென்றபடி உள்ளதால், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்தாண்டு ஆய்வு செய்த அதிகாரிகள் உயர்மட்ட பாலம் கட்டப்படுவது குறித்து, திட்ட மதிப்பீட்டை முன்மொழிவாக அரசுக்கு அனுப்பினர். இதையடுத்து, ராமாபுரம் ஓடைக்கால்வாய் மீது 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, ஒரு வாரமாக பணி துவங்கி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கனகம்மாசத்திரம் மற்றும் ராமாபுரம் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ரங்காபுரம், காவேரிராஜபுரம், நெடும்பரம், ரகுநாதபுரம், அத்திப்பட்டு, முத்துக்கொண்டாபுரம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அரக்கோணம், திருத்தணிக்கு செல்ல ராமாபுரம் ஓடைக்கால்வாயை கடந்து செல்ல வேண்டிஉள்ளது.மழைக்காலத்தில் ஓடையில், 6 அடி உயரத்திற்கு நீர் செல்லும். அப்போது, இக்கால்வாயை அவசர மருத்துவ தேவைக்குக் கூட கடந்து செல்ல முடியாது. இதையடுத்து, 10 முதல் 15 கி.மீ., தூரம் சுற்றிக் கொண்டு, திருவாலங்காடு அல்லது கனகம்மாசத்திரம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது உயர்மட்ட பாலம் அமைப்பதால், எங்களுக்கு விடிவு பிறந்துள்ளது. நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். மேலும், மழைக்காலத்திற்கு முன் பணி முடிந்து, பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நபார்டு திட்டத்தில் 3 கோடியே 18 லட்சம் ரூபாயில், 50 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பணி துவங்கி நடந்து வருகிறது. மூன்று முதல் ஆறு மாதங்களில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.- பி.டி,ஓ., அலுவலக அதிகாரி,திருவாலங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை