| ADDED : மே 01, 2024 10:39 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாமலைபுரம், காபுலகண்டிகை, மணவூர், காலனி உள்ளிட்ட கிராமங்கள். இந்த கிராமங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட நகர்களில், 2,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதிகளில் இரவு 9:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை கஞ்சா போதையில் இளைஞர் சுற்றித்திரிவதுடன், குடியிருப்புவாசிகளையும் அச்சுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இரவு நேரங்களில் ரயில் வாயிலாக வெவ்வேறு ஊர்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மணவூருக்கு படையெடுக்கின்றனர்.இங்குள்ள இளைஞர்களுடன் இணைந்து, சங்குமூர்த்தி நகர் பகுதியில் இரவில் முகாமிடுகின்றனர். புதர்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சாவை புகைத்துவிட்டு ஊர் முழுதும் சுற்றி வருகின்றனர்.மேலும், கஞ்சா போதையில் அவர்களுக்குள்ளாக சண்டையிடுவதும், அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை செய்வதும், கடையின் பூட்டு உடைத்து திருடுவது, சாலையில் செல்பவர்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது.குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்தில் புகார் செய்தால், கொலை செய்வோம் என வெளிப்படையாக மிரட்டுகின்றனர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர்.மேலும் வெளியூர்களில் இருந்து வரும் போதை ஆசாமிகளின் சொர்க்கபூமியாக மணவூர் மாறி உள்ளது. காவல் துறையினர் இரவில் ரோந்து வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், அவர்கள் குறட்டைவிடுவதே கஞ்சா இளைஞர்கள் துள்ளுவதற்கு காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் மினி கண்ணகி நகராக மணவூர் மாறும் நிலை உள்ளது. திருவள்ளூர் எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.