உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இறுதி கட்ட பணியில் பசியாவரம் பாலம் இனி படகு பயணத்திற்கு குட்பை

இறுதி கட்ட பணியில் பசியாவரம் பாலம் இனி படகு பயணத்திற்கு குட்பை

பழவேற்காடு:பழவேற்காடு மீனவப்பகுதியில், பசியாவரம், இடமணி, இடமணி ஆதிதிராவிடர் காலனி, ரஹ்மத் நகர், சாட்டன் குப்பம் ஆகிய ஐந்து மீனவ கிராமங்கள் அங்குள்ள ஏரியின் மையப்பகுதியில் அமைந்து உள்ளன.மழைக்காலங்களில், கிராமங்களை சுற்றிலும் ஏரியின் நிலப்பரப்பில் மழைநீர் தேங்கிவிடும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு இங்குள்ளவர்கள், படகுகள் உதவியுடன், பழவேற்காடு பஜார் பகுதிக்கு சென்று வந்தனர்.மேற்கண்ட கிராமங்களை சுற்றிலும், 3 - 4 மாதங்களுக்கு ஏரியில் தண்ணீர் தேங்கி இருக்கும். பள்ளி மாணவர்கள், மீனவர்கள் தினமும் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொண்டனர்.இந்த கிராமங்களில் வசிக்கும், மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, பழவேற்காடு - பசியாவரம் இடையே ஏரியின் குறுக்கே 18.20 கோடி ரூபாய் நிதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த, 2020ல் துவங்கப்பட்டது.பொன்னேரி- பழவேற்காடு சாலையில் இருந்து, பசியாவரம் கிராமம் வரை, 20 பில்லர்கள் அமைத்து, அதன் மீது 7 மீ., அகலம் மற்றும் 432 மீ. நீள ஓடுபாதைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பொன்னேரி - பழவேற்காடு சாலையில் இருந்து பாலத்திற்கான இணைப்பு சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. அதே போன்று, பசியவாரம் பகுதியில் மீனவ கிராமங்களுக்கு செல்வதற்கு ஏற்ப, இணைப்பு சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. சாலை சரிவுகளில் மண் சரிவை தடுக்க கற்கள் பதிக்கப்பட்டன.பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அணுகு சாலைகள், ஓடுபாதை, இணைப்பு சாலை ஆகியவற்றிற்கான பணிகள் தற்போது முடிந்து உள்ளன.இனி வர்ணம் பூசுவது, மின்விளக்கு கம்பம் பொருத்துவது என சிறிய பணிகள் மீதமுள்ளன. பாலப்பணிகளில் பெரும்பாலானவை முடிவுற்று, இறுதிகட்டத்திற்கு வந்து உள்ளது.அடுத்த சில தினங்களில் பாலம் பயனுக்கு வர உள்ள நிலையில், இனி மழைக்காலங்களில், மேற்கண்ட ஐந்து மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு படகு பயணம் அவசியமில்லை என்பதால், நிம்மதி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்