| ADDED : ஜூலை 22, 2024 06:11 AM
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி மாதம் என்பதால் மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் மலர் காவடிகளுடன் வந்தனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பரணி, மறுநாள் ஆடிக்கிருத்திகை விழா என்பதால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வகை காவடிகளுடன் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர் கூட்ட நெரிசலில் இருந்து பக்தர்கள் தப்பிக்கவும், மூலவரை எளிதாக தரிசிக்கலாம் என திட்டமிட்டு நேற்றே பக்தர்கள் காவடிகளுடன் வந்து தரிசனம் செய்தனர்.இதனால் பொதுவழியில் பக்தர்கள் நான்கு மணி நேரம் தேர்வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், இரண்டு மணி நேரமும் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர். இதுதவிர அதிகளவில் பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு வந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 40க்கும் மேற்பட்ட போலீசார் பக்தர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.