| ADDED : ஆக 16, 2024 11:15 PM
கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி என்பது தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியை இணைத்தபடி, 481 சதுர, கி.மீ., பரப்பு கொண்ட பரந்து விரிந்த ஏரியாகும். அந்த ஏரியின் சதுப்பு நில பகுதிகள், பறவைகள் இரை தேட தோதுவாக இருப்பதால், சுமார், 100 வகையான பறவைகள், பழவேற்காடு ஏரியை வசிப்பிடமாக கொண்டுள்ளன. ஒட்டுமொத்த பழவேற்காடு ஏரியும், பறவைகள் சரணாலயமாக திகழ்வதால், அந்தந்த பகுதிக்கு என, தனி பெயர் கொண்டு அழைக்காமல், 'பழவேற்காடு சரணாலயம்' என, பொதுவாக அழைக்கப்படுகிறது.ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும், பழவேற்காடு ஏரியின் சதுப்பு நில பகுதிகள் உள்ளன. அங்கு இரை தேடும் பறவைகளை காண எப்போதும் சுற்றுலா பயணியர் வருவது வழக்கம்.தற்போது சாலையோரம் கண்ணுக்கு எட்டிய தொலைவில், நுாற்றுக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக இரை தேடி வருகின்றன.பைனாகுலர் உதவியுடன், பிளமிங்கோ பறவைகள் இரை தேடும் அழகை கண்டு, சுற்றுலா பயணியர் ரசித்து வருகின்றனர்.