உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் தொடரும் கழிவுநீர் கலப்பு கண்டுகொள்ளாமல் ரூ.30 கோடியில் வெள்ள தடுப்பு

புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் தொடரும் கழிவுநீர் கலப்பு கண்டுகொள்ளாமல் ரூ.30 கோடியில் வெள்ள தடுப்பு

சென்னை:புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அதை கண்டுக்கொள்ளாமல், 30 கோடி ரூபாயில் வெள்ள தடுப்பு பணிகள் நடந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் உபரிநீர் திறக்கும் ஷட்டர்கள், செங்குன்றத்தில் உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏரி நிரம்பும்போது, இதில் திறக்கப்படும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு 11 கி.மீ.,க்கு உபரிநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இது செங்குன்றம் ஷட்டர் அருகே துவங்கி சாமியார்மடம், பாபா நகர், வடகரை, கிராண்ட்லைன், திருநீலகண்டன் நகர், வடப்பெரும்பாக்கம், கொசப்பூர் வழியாக சடையங்குப்பம் சென்று, அங்கு வங்க கடலில் கலக்கிறது. இதற்கான கால்வாய், சாமியார்மடம் முதல் திருநீலகண்டன் நகர் வரை திருவள்ளூர் மாவட்ட எல்லையிலும், வடப்பெரும்பாக்கம் முதல் சடையங்குப்பம் வரை சென்னை மாநகராட்சி எல்லையிலும் உள்ளன.மாநகராட்சி விரிவாக்கப்பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு ஊராட்சிகளின் கழிவுநீரும், புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. இதற்காக, மாநகராட்சி வாயிலாக, மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு நேரடியாக, உபரிநீர் கால்வாயில் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்புகள் வழியாக 24 மணிநேரமும், பொங்கும் நுரையுடன் கழிவுநீர் வெளியேறி, கால்வாயில் கலந்து வருகிறது. இதனால், புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்காக, புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ள தடுப்பு சுவர் கட்டுமானம் மற்றும் கரையை பலப்படுத்தும் பணிகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.ஏற்கனவே, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் சீரமைப்பு பணிக்கு, கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், உபரிநீர் கால்வாய்க்கு வரும் கழிவுநீரை கட்டுப்படுத்துவதற்கு நீர்வளத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி வாயிலாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கால்வாயில் ஆகாயதாமரை, வேலிகாத்தான் மட்டுமின்றி பெரிய அளவிலான மரங்களும் வளர்ந்துள்ளன. தடுப்பணைகளை கட்டினால், நீரை தேக்கி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த முடியும். அதை கண்டுக்கொள்ளாமல், கரைகளை பலப்படுத்தும் பணிகளில் மட்டுமே, நீர்வளத்துறை கவனம் செலுத்தி வருகிறது. இதனால், புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மாசடைந்து, சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வருகிறது. முறையான திட்டமிடல் இல்லாமல், நீர்வளத்துறை செயல்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நடந்துவரும் பணிகளால், வெள்ளநீரை வெளியேற்றுவதை தவிர வேறு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை