| ADDED : ஜூன் 12, 2024 02:20 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட நமச்சிவாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி. 60 ஆண்டுகள் பழமையாகி பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள இப்பள்ளியில், மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, இதே பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் ஜெகதீஷ்குமார், 47, என்பவர், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 சென்ட் நிலத்தை, அரசு பள்ளி கட்டுவதற்கு 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அலுவலகத்திற்கு தானமாக வழங்கினார்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி 2022ம் ஆண்டு ஜூன் மாதம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 51 சதவீத தொகையான 11.20 லட்சம் ரூபாய் பொதுமக்கள் பங்களிப்புடன் 22 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணி துவங்கியது.இந்த பள்ளி கட்டடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், இன்று வரை திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் புதிய பள்ளி கட்டடம் பயன்பாட்டிற்கு வராததால், செடிகள் வளர்ந்து புதர் சூழ்ந்து வருவது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தொடுகாடு ஊராட்சியில் ஆய்வு செய்து, அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி கட்டடத்திற்கு திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.