| ADDED : ஜூலை 26, 2024 02:52 AM
திருத்தணி:திருத்தணி நகரத்தில் போக்குவரத்து நெரிசலால், தினமும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மேலும், போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகள் நடந்தன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.கடந்த 2018ம் ஆண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, திருத்தணி நெடுஞ்சாலை துறையின் சார்பில், 47 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை--- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பட்டாபிராமபுரம் பகுதியில் இருந்து கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருத்தணி--- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழா, கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, புதிய புறவழிச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை துறை திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் ரகுமான், உதவி பொறியாளர் புஷ்பராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.இந்த புதிய புறவழிச்சாலையால், இனிவரும் காலங்களில் திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துக்கள் தவிர்க்கப்படும். இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் நகர வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.