| ADDED : மார் 23, 2024 10:14 PM
பொன்னேரி:பொன்னேரி உப்பரபாளையம் பகுதியில், சாஸ்திரி தெரு, தடப்பெரும்பாக்கம் சாலை, முத்தமிழ் வீதி, கருமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.அப்பகுதியில் இரண்டு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, மின்வினியோகம் நடைபெறுகிறது. கோடையில் கிடைக்கும் மின்சாரம் போதுமானதாக இல்லாமல், பழுதடைந்து இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது.அதே பகுதியில் புதியதாக வீட்டுமனைப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அங்கும் ஏரளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. சில புதிய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.இந்த புதிய குடியிருப்பு பகுதிக்கும், மேற்கண்ட மின்மாற்றிகளின் இருந்து மின்சாரம் செல்கிறது. இதனால் மின்தேவை மேலும் அதிகரித்து உள்ளது. கோடையில் ஏற்படும் மின்வெட்டை தவிர்க்க, புதியதாக உருவாகும் குடியிருப்பு பகுதிக்கு என தனி மின்மாற்றி பொருத்த திட்டமிடப்பட்டது.இதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்டன. மேற்கொண்டு எந்தவொரு பணிகளும் நடைபெறாமல் மின்மாற்றி அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.தற்போது கோடைகாலம் துவங்கிய நிலையில், மின்தேவை அதிகரித்து வருவதால், மேற்கண்ட அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து, ரான மின்வினியோகம் வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.