| ADDED : ஆக 01, 2024 12:33 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பில், பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை கொண்டு, 300 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து குருவிஅகரம், ரெட்டம்பேடு, குமரஞ்சேரி வழியாக பனப்பாக்கம் ஏரிக்கு வரத்துக்கால்வாய் உள்ளது.இதன் வழியாக மழைநீர் ஏரிக்கு வரவேண்டிய நிலையில், கால்வாய் முழுதும் புதர்கள் சூழ்ந்தும், விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக ஆங்காங்கே பாதைகள் அமைத்தும் உரிய பராமரிப்பு இன்றி துார்ந்துள்ளது.இதனால், ஏரிக்கு மழைநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வரத்துக் கால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. நடவடிக்கை இல்லாத நிலையில், கடந்த மாதம், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர்.அதன்படி, தற்போது பனப்பாக்கம் ஏரியின் வரத்துக் கால்வாய் துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கால்வாயில் உள்ள புதர்களை அகற்றி, கரைகள் பலப்படுத்தப்படுகிறது.கால்வாய் அகலப்படுத்தி துார்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளபடுவதால், இந்த ஆண்டு மழையின் ஏரிக்கு கூடுதல் மழைநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.