| ADDED : மே 16, 2024 12:48 AM
ஆவடி:ஆவடி போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2023 -- 24ல் நடந்த கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் மீட்கப்பட்ட பொருட்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கமிஷனர் சங்கர் தலைமை தாங்கினார்.இதில், 28 குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான 185 சவரன் தங்க நகைகள். 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ வெள்ளி நகைகள், 398 மொபைல் போன்கள் மற்றும் 4.67 லட்சம் ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கமிஷனர் சங்கர் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில், தீர்வு காணப்படாத 50 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கமிஷனர் சங்கர் கூறுகையில், ''பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்கள் பார்வைக்கு படும்படி 'விசிபல் போலீஸ்' என்ற பெயரில் போலீசார், நடந்து சென்று ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன,'' என்றார்.