உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் கமலத்தேர் விழா கோலாகலம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் கமலத்தேர் விழா கோலாகலம்

திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கமலத் தேர் திருவிழா நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் அலங்கரிக்கப்பட்ட கமலத் தேரில் எழுதருளினார். பின் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், உஷாரவி, சுரேஷ்பாபு மற்றும் நாகன் ஆகியோர் கமலத்தேரை துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் திருவீதியுலா வந்த தேர், பகல், 1:30 மணிக்கு காளியம்மன் கோவில் வளாகத்தில் நின்றது. மாலை, 3:30 மணிக்கு கமலத்தேர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மாலை, 6:30 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது.

மீஞ்சூர்

வடகாஞ்சி என அழைக்கப்படும், மீஞ்சூர் காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம், 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சூர்யபிரபை, சந்திரபிரபை, பூதவாகனம், நாகவாகனம், ரிஷபவாகனம், அதிகார நந்தி, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா என தொடர்ந்து, கடந்த, ஆறு நாட்களாக காலை மற்றும் இரவு உற்சவங்கள் நடந்தன.விழாவின், ஏழாம் நாளான நேற்று, தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. காலை, 9:00மணிக்கு வாண வேடிக்கைகளுடன் தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஏகாம்பரநாதர் உற்சவ பெருமான் வீற்றிருந்தார். மங்கள வாத்தியம், செண்ட மேள முழுங்க பக்தர்கள் கூட்டத்தின் நடுவே தேர் மாடவீதிகள் வழியாக பவனி வந்தது.பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்தனர். 'ஓம் நமச்சிவாயா, ஓம்நமச்சிவாயா' என நெஞ்சுருக சிவபெருமானை வழிபட்டனர். மீஞ்சூர் போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமழிசை

திருமழிசையில் அமைந்துள்ளது ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இங்கு கடந்த 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பங்குனி உத்திர விழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருளி துவங்கிய தேரோட்டம் பகல் 1:30 மணியளவில் கோவிலை அடைந்தது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபம் எழுந்தருளலும், இரவு 8:00 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் எழுந்தருளலும் நடந்தது. இதில் திருமழிசை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வரும் 24ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடக்கிறது. 29ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை