| ADDED : ஜூலை 02, 2024 06:55 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் ஊராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சேகரமாகும் குப்பை, இறைச்சி கழிவுகள் வி.ஜி.கே.புரம் கொசஸ்தலையாற்றில் திருவாலங்காடு சாலையில், பழைய தரைப்பாலம் அருகே கொட்டப்படுகின்றன.இதனால் கொசஸ்தலையாறு மாசடையும் அபாய நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டால் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன் நீரின் சுவை, நிறம், தன்மை மாறும் அபாயம் உள்ளது என, தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து புகார் தெரிவித்தும் நீர்வளத்துறையோ ஊரக வளர்ச்சி துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஆற்றின் நீர்வழித்தடத்திலே டிராக்டர் வாயிலாக கொண்டு வந்து குப்பை, கழிவை கொட்டி செல்கின்றனர். கேட்டால் ஊராட்சி நிர்வாகம் கொட்ட சொல்வதாக கூறுகின்றனர். தற்போது அங்கேயே வைத்து தீயிட்டு கொளுத்தி விட்டு செல்கின்றனர். இதே போன்று தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டால் கொசஸ்தலையாறு கூவம் ஆறாக மாறும் அபாய நிலை உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.