| ADDED : மே 03, 2024 11:54 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சியில் அகூர் கிராமம், காலனி மற்றும் நத்தம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் குடிநீர் பிரச்னை தீர்க்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்து, குளங்களை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகளை துவங்கியுள்ளன. முதற்கட்டமாக, அகூர் காலனி பகுதியில் உள்ள குளத்தை, 2024-- 25ம் ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6.66 லட்சம் ரூபாய் மதிப்பில், குளத்தை ஆழப்படுத்தி கரைகள் சீரமைக்க தீர்மானித்துள்ளது.மேலும், நத்தம் மற்றும் அகூர் காலனி அருகே உள்ள மலைப்பகுதியில், இருந்து வெளியேறும் மழைநீரை வீணாகாமல், தண்ணீரை குளத்திற்கு கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது, குளம் ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணிகள், இம்மாதத்திற்குள் முடித்து, வரும் பருவ மழை தண்ணீரை சேமிக்கவும் ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இந்த குளத்தில், தண்ணீர் சேமித்தால் அகூர் காலனி மற்றும் கிராமத்தில் குடிநீர் பிரச்னை தீர்ப்பதுடன், குளத்தை சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என கூறப்படுகிறது.