உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பேருந்துகள் பற்றாக்குறை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி

அரசு பேருந்துகள் பற்றாக்குறை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுவதால், பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து, சென்னை கோயம்பேடு, செங்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மேல்மலையனுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, சத்தியவேடு, நெல்லுார் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு, 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள, 15 பேருந்துகள் தான் ஊத்துக்கோட்டை - செங்குன்றம் மற்றும் பிளேஸ்பாளையம், மேலக்கரமனுார், முக்கரம்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. மேலும், இங்கிருந்து மேற்படிப்பு, வெளியூர்களில் வேலை செய்பவர்கள் இந்த அரசு பேருந்துகளை நம்பியே உள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து திறந்த நிலையில், ஊத்துக்கோட்டையில் இருந்து தொம்பரம்பேடு, தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, தண்டலம், பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளிகளுக்கு கல்வி கற்க வருகின்றனர். இவர்களும் அரசு பேருந்துகளையே நம்பி உள்ளனர்.பாடியநல்லுார் மாநகர அரசு பேருந்து பணிமனையில் இருந்து, 8 பஸ்கள், ஊத்துக்கோட்டை - செங்குன்றம் மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. மாணவர்கள் இதில் இலவசமாக செல்கின்றனர். காலை, மாலை வேளைகளில் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து, மாநகர பேருந்து இவைகளுக்கு இடையே மாணவர்களை யார் ஏற்றிச் செல்வது என்ற போட்டி நிலவுகிறது. இதனால் பள்ளி நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன் அனைத்து பேருந்துகளும் சென்று விடுகின்றன.குறிப்பாக, மாலை நேரங்களில் குறித்த நேரத்திற்கு பஸ்கள் இல்லாததால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரும் பேருந்துகளில் ஏறி அபாயகரமான வகையில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இரண்டு பேருந்து நிர்வாகத்தினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். இதில் பாதிப்பது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தான். எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ