| ADDED : ஜூன் 08, 2024 12:58 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி, தனியார் தொழிற்சாலை பேருந்து, கனரக மற்றும் இலகுர வாகனம் என தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சாணத்தை தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதேபோல் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நெடுஞ்சாலையோரம் குளம்போல் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருவதோடு தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மப்பேடு ஊராட்சியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.