உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைநீரில் மிதக்கும் காக்களூர் ஹவுசிங் போர்டு மாணவர்கள், குடியிருப்புவாசிகள் கடும் அவதி

மழைநீரில் மிதக்கும் காக்களூர் ஹவுசிங் போர்டு மாணவர்கள், குடியிருப்புவாசிகள் கடும் அவதி

திருவள்ளூர்: காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், சமீபத்தில் பெய்த மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி உள்ளதால், குடியிருப்புவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் - ஆவடி புறவழிச்சாலையில், கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்பு மனைகள் விற்பனை செய்யப்பட்டன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்ற, பாதாள சாக்கடை திட்டம், சாலை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டன.இங்கு பெரும்பாலான மனைகளில் வீடு கட்டப்படாமல், காலியாக உள்ளன. அங்கு, முட்செடிகள் வளர்ந்து, புதராக மாறி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக மாறிவிட்டது. இங்கு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அனைத்தும், கழிவுநீர் வெளியேற வழியின்றி, உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தேங்கி உள்ளது. மழைநீர் வெளியேற வழியில்லாமல், மழை காலத்தில் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், குடியிருப்புக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.இதனால், குடியிருப்புவாசிகள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லவும், கடைகளுக்கும், பிற தேவைகளுக்காகவும், மழைநீரில் தத்தளித்தபடி செல்ல வேண்டி உள்ளது. சாலைகள் அனைத்தும், குண்டும், குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். குடிநீர் குழாய்களும் துார்ந்து போய்விட்டன.எனவே, காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு, வீட்டுவசதி வாரியம் மற்றும் காக்களூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு இப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

துர்நாற்றம் வீசும் ஏரி

திருவள்ளூர் அடுத்த, காக்களூர் ஏரி, 200 ஏக்கர் பரப்பு கொண்டது. திருவள்ளூர் நகராட்சி எல்லைக்கு அருகில் உள்ள இந்த ஏரி, காக்களூர் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அமைந்துள்ளது. ஏரியைச் சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. தற்போது, இந்த ஏரி மற்றும் ஏரிக்கரை சாலை, குப்பை கொட்டும் பகுதியாக மாறி விட்டது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் சேரும் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை ஏரிக்கரையில் கொட்டுகின்றனர். சிலர் பிளாஸ்டிக் கழிவுகள், கோழி இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகளையும், கொட்டிச் செல்கின்றனர். இதன் காரணமாக, ஏரி நீர் மாசடைந்து, மீன்கள் செத்து மிதப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, காக்களூர் பகுதிக்கு செல்லும், ஏரிக்கரை சாலையில், துர்நாற்றம் வீசுகிறது. குப்பையால் ஏரி நீர் மாசடைந்து நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயமும் உள்ளது.இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரி தற்போது குப்பையால் மாசடைந்து வருகிறது. தற்போது, மழை பெய்ததால், ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரி மற்றும் கரையோரம் குப்பை கொட்டுவதை, பொதுப்பணி மற்றும் ஊராட்சி நிர்வாகம் தடை செய்து, ஏரியை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை