திருவள்ளூர்: சென்னை - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் பாலம் இணைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரை அமைக்கப்பட்டு, போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து திருநின்றவூர் வரை, மீதம் உள்ள பணி, கடந்த 2022ல், 364 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கி நடைபெற்று வருகிறது.ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் வரை, 17.5 கி.மீட்டர் துாரம் சாலை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இச்சாலையில், ஏழு இடங்களில் மேம்பாலம் மற்றும் 17 இடங்களில் சிறுபாலம் கட்டப்பட்டு வருகிறது.குறிப்பாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை குறுக்கே, ஐ.சி.எம்.ஆர்., அருகில் ஏற்கனவே உள்ள திருப்பதி நெடுஞ்சாலையில் இருந்து, திருநின்றவூர் வரை செல்லும் சாலையில், மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இச்சாலையில் வாகனங்கள் செல்ல சிரமப்பட்டு வருகின்றன.சாலையின் இருபுறமும் இணைக்கும் வகையில், இந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில், 'கர்டர்' அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ராட்சத கிரேன் கொண்டு, 'கர்டர்' பொருத்தப்பட்டு வருகிறது. மேலும், பெரும்பாக்கம் ஏரி வரை சாலைப் பணியும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.