ஒருவழி சாலையாக மாறுமா?
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து ரயில் நிலையத்தை இணைக்கும், ரயில் நிலைய சாலை மற்றும் வி.எம்., சாலை மிகவும் குறுகலாக உள்ளது.இந்த இரு சாலையோரங்களிலும், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நெருக்கடியான இச்சாலை, பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதன் காரணமாக, இரு சாலைகளையும் ஒரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். ஒரு சாலை ரயில் நிலையம் செல்வதற்கும், மற்றொரு சாலை ரயில் நிலையத்தில் இருந்து வருவதற்கும் என, மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.
சோழவரம் பி.டி.ஓ., அலுவலக நிழற்கூரை சேதம்
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழி தடத்தில், பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.இந்த பயணியர் நிழற்குடையின் இருக்கைகள் சேதமடைந்து, பராமரிப்பு இல்லாததால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால், பயணியர் பயன்படுத்த முடியாமல், வெயில் மற்றும் மழையில் நனைந்து கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நிழற்கூரை அருகே வட்டார வளர்ச்சி அலுவலகம், கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காவல் நிலையம் அமைந்துள்ளது.எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்கூரையை விரைந்து சீரமைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -புதுமைப்பித்தன், சோழவரம்.