| ADDED : ஜூலை 03, 2024 10:22 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சி தலைவராக சோபன்பாபு உள்ளார். இந்த ஊராட்சியில், 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.'ஊராட்சியில் வீட்டு மனை உரிமை அதிகாரம், வரி வசூலிப்பு செய்து அதை அரசு கணக்கில் செலுத்தவில்லை' என, துணைத் தலைவர் கெத்சியாள் வசந்தகுமார் உள்ளிட்ட 12 உறுப்பினர்களும், திருவள்ளூர் கலெக்டர், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.இது தொடர்பாக, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.இது தொடர்பாக, அவர் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து, ஊராட்சிகளின் உதவி இயக்குனர், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், அனைத்து வார்டு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ) ஆகியோரிடம் நேரடி விசாரணை மேற்கொண்டார்.விசாரணையில், ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராரமரிப்பு, பொது சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகளும், ஊராட்சி நிர்வாகம் சார்ந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து, ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வழங்கப்பட்ட நிதி கையாளும் அதிகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்தும், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.