| ADDED : மே 04, 2024 11:52 PM
திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் டோல்கேட் பகுதியில் இருந்து, கனகம்மாசத்திரம், திருத்தணி வழியாக தமிழக- ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடி வரை மொத்தம், 43 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக உள்ளது. இச்சாலையில், 24 மணி நேரமும் அதிகளவில் வாகனங்கள் சென்றவாறு இருப்பதாலும், இரு வழிச்சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதையடுத்து, மேற்கண்ட சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு அரசு தீர்மானித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.முதற்கட்டமாக டோல்கேட் பகுதியில் இருந்து திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு போதிய இடவசதி உள்ளதா, சாலை அமைப்பதற்கு தரை மற்றும் மண் ஏதுவாக உள்ளதா என்பது குறித்து நெடுஞ்சாலை துறையின் சார்பில், 10 குழுக்கள் கொண்ட சர்வேயர்கள் சாலை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர்.சர்வே பணி ஓரிரு நாளில் முடிந்தவுடன் திட்டமதிப்பீடு மற்றும் சாலை விரிவாக்கம் செய்வதற்கு நில எடுப்பு பணி நடைபெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.