உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தானியங்கி கட்டுப்பாட்டு ஷட்டர்கள் லட்சுமிபுரம் அணைக்கட்டில் அமையுமா?

தானியங்கி கட்டுப்பாட்டு ஷட்டர்கள் லட்சுமிபுரம் அணைக்கட்டில் அமையுமா?

பொன்னேரி: பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் -- ஆலாடு கிராமங்களுக்கு இடையே, ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. மழைக்காலங்களில் அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பெரும்பேடு, காட்டூர், தத்தமஞ்சி, வேலுார் ஏரிகளுக்கு கொண்டு சென்று சேமித்து வைக்கப்படுகிறது.இதற்காக, அணைக்கட்டின் இருபுறமும் ஆறு ஷட்டர்கள், கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், அணைக்கட்டு பகுதியில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து சிவபுரம், மனோபுரம், ரெட்டிப் பாளையம் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த அணைக்கட்டு, 0.14 டி.எம்.சி., தண்ணீர் சேமித்து வைக்க முடியும். கடந்தாண்டு பெய்த கனமழையால், அணைக்கட்டு நிரம்பியது.ஷட்டர்கள் திறக்கப்பட்டு, இந்த ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. ஏரிகள் நிரம்பிய பின் உபரிநீர், பழவேற்காடு கடலில் கலந்தது.தற்போது, அணைக்கட்டில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தேங்கியுள்ள தண்ணீர் வேகமாக ஆவியாகி, அடுத்த சில நாட்களில் வறண்டு விடும் நிலை உள்ளது.இந்த அணைக்கட்டில் கூடுதல் தண்ணீரை சேமிக்க தானியங்கி கட்டுப்பாட்டு ஷட்டர்கள் பொருத்த வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:இந்த அணைக்கட்டில் தேங்கும் தண்ணீரால், ஆற்றங்கரையோரங்களில், 3,033 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆற்றங் கரைகளில் உள்ள ஆழ்துளை மோட்டார்களால், 50 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.அணைக்கட்டின் மீது தானாக திறந்து மூடும் ஷட்டர்கள் அமைத்தால், கூடுதல் மழைநீரை சேமிக்க முடியும். இந்த தானியங்கி ஷட்டர்கள் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது திறந்த நிலையில் இருக்கும்.நீர்வரத்து குறையும்போது தானாக மூடிக்கொண்டு, கடைசியாக வரும் தண்ணீரை சேமித்து வைக்கும். இதன் வாயிலாக, அணைக்கட்டில், 0.25 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும். இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்