உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சோழவரம் ஏரி திறப்பால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு கால்வாய் துார்வாராததால் விவசாயிகள் தவிப்பு

 சோழவரம் ஏரி திறப்பால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு கால்வாய் துார்வாராததால் விவசாயிகள் தவிப்பு

சோழவரம்: சோழவரம் ஏரியின் கலங்கல் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர், அருகில் உள்ள விவசாய நிலங்களை மூழ்கடித்து உள்ளதால், 100 ஏக்கர் வீணானது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உள்ளது. ஏரியின் கரைகள் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்து இருந்ததை தொடர்ந்து, 48 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரியில் அதிகபட்சமாக, 0.79 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கரைகள் ஆங்காங்கே சேதம் அடைந்ததை தொடர்ந்து, ஏரியில் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உருவானது. அதை தொடர்ந்து, கடந்த, 11ம் தேதி முதல், ஏரியில் தேங்கிய தண்ணீரை சென்னையின் குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு, 250 கன அடி வீதம் புழல் ஏரிக்கு வெளியேற்றப்பட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சேதமான கரைகள் மேலும் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழலில், நேற்று முன்தினம் முதல், சோழவரம் ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு, 500 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றிற்கு வெளியேற்றப்படுகிறது. ஏரியின் கலங்கல் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த கால்வாய் கரைகள் பராமரிக்காததால், ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் சரிவர செல்லாமல், அருகில் உள்ள விவசாய நிலங்களை மூழ்கடித்து வருகிறது. இதனால், சோழவரம் பகுதியில், 100 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால், விவசாயிகள் தவித்து வருகின்றனர். கால்வாயை முறையாக துார்வாரி, கரைகளை பலப்படுத்தாமல் விட்டதே, நெற்பயிர்கள் பாதிப்பிற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

3,000 கன அடி நீர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. வடகிழக்கு பருவமழை மற்றும் கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வழியே வந்த கிருஷ்ணா நீர் ஆகியவற்றால் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை அடையும் நிலை ஏற்பட்டது. அணையின் பாதுகாப்பை கருதி அங்குள்ள மதகுகள் வழியே உபரிநீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கான 'ஆரஞ்சு அலார்ட்' விடுக்கப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய கொள்ளளவு, 2.348 டி.எம்.சி., நீர்மட்டம், 32.50 அடி. அங்குள்ள, 16 மதகுகளில், 6, 10 ஆகிய இரண்டு மதகுகள் வழியே வினாடிக்கு, 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை