| ADDED : பிப் 03, 2024 11:33 PM
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது: நடப்பு சம்பா பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 62 இடங்கள், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் சார்பில், நான்கு இடங்கள் என மொத்தம் 66 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டடங்களில் மட்டுமே திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், 2016-- -17ம் ஆண்டு முதல் 2022- -23 ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில், 362.84 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.நுண்ணுயிர் பாசனத்திட்டம் கீழ் மூன்று விவசாயிகளுக்கு, 53,115 ரூபாய் மதிப்பில் தெளிப்பான்கள், மீன்வளத்துறையின் மூலம் மானிய விலையில் மீன்குஞ்சு வளர்ப்பு மையம் அமைக்க ஒரு விவசாயிக்கு, 7 லட்சம் ரூபாய், வேளாண் பொறியியல் துறை மூலம் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில், நான்கு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறு அமைக்க, 4 விவசாயிகளுக்கு, 29.31 லட்சம் ரூபாய் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு, 36.84 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேதவல்லி, வேளாண் துணை இயக்குனர் சுசீலா உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.