கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில், வசித்தவர் பாலசுப்பிரமணியன், 43. நண்பர் ஒருவருக்கு உதவியாக அரசு மதுக்கடையில் வேலை பார்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள குளக்கரையில், கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தார்.இது குறித்து வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம், கொலையில் ஈடுபட்ட மாநெல்லுார் இன்பராஜ், 23, பாதிரிவேடு ஹேமநாத், 24, என்.எஸ்.நகர்., சுரேந்தர், 23, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், பாலசுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி, 37, பாதிரிவேடு பகுதியை சேர்ந்த நெசவு தொழிலதிபர் முத்தும் ஜெயம், 43, என்பவருக்கும் பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ய இருவரும் திட்டம் திட்டியுள்ளனர். அதன்படி மேற்கண்ட மூவருக்கும் 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.சம்பவத்தன்று இரவு வீட்டின் தெரு முனையில் நடந்து சென்ற பாலசுப்பிரமணியனை, மேற்கண்ட மூவரும், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின் உடலை குளக்கரைக்கு எடுத்து சென்று புதைத்தனர் என்பது தெரிந்தது.இதையடுத்து, புவனேஸ்வரி, தொழில் அதிபர் முத்தும் ஜெயம், ஹேமநாத், இன்பராஜ், சுரேந்தர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.