ஆர்.கே.பேட்டை: ஆர்.கே. பேட்டை பகுதியில் ஐந்து மாதங்களாக கைத்தறி நெசவில், ஏழு லட்சம் இலவச வேட்டி, சேலைகள் நெசவு செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் வாயிலாக, இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார், அத்திமாஞ்சேரிபேட்டை, மத்துார், புச்சிரெட்டிபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கைத்தறி நெசவு அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் சீருடை தயாரிக்க, கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக வாய்ப்பு வழங்கப்படுகிறது. கைத்தறி மற்றும் 'பெடல் தறி' எனப்படும் எளிய இயந்திர அமைப்பு தறிகளில் இந்த வேட்டி, சேலைகள் நெசவு செய்யப்படுகின்றன. ஒரு சேலை நெசவு செய்வதற்கு, நெசவாளர்களுக்கு, 90 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 75 கைத்தறி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2,170 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, கடந்த ஜூலை முதல் நவ., மாதம் வரையிலான கால கட்டத்தில், ஏழு லட்சம் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்துடன் உற்பத்தி நிறைவு செய்யப்பட்டு, இலவச வேட்டி, சேலைகள் வேலுார் மாவட்ட கூட்டுறவு சங்க கிடங்கில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உற்பத்தி இலக்கு உரிய காலத்தில் எட்டப்பட்டு நிறைவு செய்துள்ள நெசவாளர்கள் தற்போது தொழில் வாய்ப்பு இன்றி உள்ளனர். அடுத்த கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான சீருடை உற்பத்திக்கான உத்தரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், 2,170 நெசவாளர்களும் காத்திருக்கின்றனர். இது குறித்து கைத்தறி கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இலவச வேட்டி, சேலை உற்பத்தி தற்போது தான் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு கிடைத்தவுடன் அடுத்தகட்ட நெசவுக்கான தொழில் வாய்ப்பு நெசவாளர்களுக்கு வழங்கப்படும்' என்றார். 365 நாளும் நெசவு செய்ய தயார் பரம்பரையாக கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு, வேறு தொழில் தெரியாது. வீட்டுடன் இருந்து கைத்தறி நெசவில் ஈடுபட்டு வருகிறேன். ஆண்டு முழுதும் தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்ப்பட வேண்டும். ஒரு ஒப்பந்த உத்தரவு முடிந்ததும், அடுத்த உத்தரவுக்காக நுால் வழங்கப்படாமல் தறிகள் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. நெசவு செய்ய வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். - - எல். தட்சணாமூர்த்தி, நல்லவானம்பேட்டை.