| ADDED : நவ 28, 2025 03:26 AM
ஆர்.கே.பேட்டை: சோளிங்கரில் இருந்து அய்யனேரி வழியாக திருத்தணிக்கு செல்லும் சாலையில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக திருத்தணிக்கு நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதற்கு மாற்றுப்பாதையாக, சோளிங்கரில் இருந்து அய்யனேரி வழியாக பழமையான ஒருவழி சாலை திருத்தணிக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாலை மார்க்கமாக அரசு நகர பேருந்து தடம் எண்: 5 நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. மின் பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த பேருந்துகளால் திருத்தணி மற்றும் சோளிங்கர் நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர். இந்நிலையில், ஒருவழி சாலையாக உள்ள இந்த மார்க்கத்தில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்கும் போது சாலையில் போதிய இடமின்றி வயல்வெளியில் கவிழும் அபாயநிலை இருந்து வருகிறது. இந்த சாலையை இருவழி சாலையாக அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பயணியரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இந்த மார்க்கத்தில் உள்ள பாலங்கள் இருவழி சாலைக்கு ஏற்ப அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.