| ADDED : பிப் 05, 2024 11:45 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் ஆடு, கோழி இறைச்சி வாங்க, பழைய பேரூராட்சி அலுவலக பின்புறம் கடைகள் உள்ளன. இங்கு கோழி, ஆடு, மீன் இறைச்சிகள் விற்கப்படுகின்றன. புதன், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு மக்கள் இறைச்சி வாங்க வருவர்.பேரூராட்சி அலுவலகம் மூலம் இந்த மீன் மார்க்கெட் பராமரிக்கப்படுகிறது. இங்கு இறைச்சி விற்க ஏலம் வாயிலாக கடைகள் ஒதுக்கப்படுகின்றன. இங்கு, 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கூரை இல்லை. இதனால் வெயில், மழைக்காலங்களில் இறைச்சி வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்த நிலையில், சமீபத்தில் கலெக்டர் பிரபுசங்கர் இறைச்சி கடைகளை ஆய்வு செய்தார்.அப்போது மீன் வியாபாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு கூரை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை இறைச்சி கடைகளுக்கு கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என, பேரூராட்சிக்கு உத்தரவிட்டார். பேரூராட்சி உதவி இயக்குனர் ஜெயக்குமார், ஊத்துக்கோட்டை செயல் அலுவலர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.