சென்னை:பெரிய நிறுவனங்களிடம் சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்காததால், திருவள்ளூர் கலெக்டருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை, மார்ச் 1க்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன், அம்மாவட்ட கலெக்டருக்கு எதிராக தாக்கல் செய்த அவமதிப்பு மனு:எங்கள் பஞ்சாயத்திலும், அதை சுற்றிய பகுதியிலும் 26 பெரிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களுக்கான திருத்திய சொத்து வரியை வசூலிக்க நடவடிக்கை எடுத்தோம். அதுகுறித்து, நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், பதில் இல்லை. சொத்து வரி வசூலிக்க, வருவாய் வசூல் அதிகாரியை நியமிக்கும்படி, கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பின், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். சொத்து வரி வசூலிக்க உடன் நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த ஆண்டு ஜூன் 23ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை கலெக்டர் அமல்படுத்தவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், கலெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி, ''நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை அமல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார். உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, மார்ச் 1க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.