பேருந்து நிலைய நுழைவாயிலில் சேதமடைந்த கால்வாயால் அபாயம்
திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்திற்கு செல்லும் நுழைவாயில் பகுதியில், கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில், அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், பேருந்து நிலையத்தில் அதிகாலை 3:30 - நள்ளிரவு 11:00 மணி வரை நுாற்றுக்கணக்கான பயணியர் பேருந்துக்காக காத்திருப்பர். அரக்கோணம் சாலையில் இருந்து சன்னிதி தெரு வழியாக, அண்ணா பேருந்து நிலையத்திற்கு செல்லும் நுழைவாயில் பகுதியில், மழைநீர் கால்வாய் சேதமடைந்து, கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் செல்கிறது. மேலும், பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் உட்பட அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, கால்வாய் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாயை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.