| ADDED : டிச 08, 2025 06:30 AM
மீஞ்சூர்: அத்திப்பட்டு புதுநகரில், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர், மோட்டார் உதவியுடன் வெளியேற்றப்பட்டு வருகிறது. மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை தாழ்வான பகுதியில் இருப்பதால், கனமழையின் காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். நேற்று முன்தினம், அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது சடலத்தை பிரதான சாலையில் வைத்து இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும் உள்ளதால், அவற்றின் உரிமையாளர்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். ராட்சத மோட்டார்கள் உதவியுடன் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டும் மழைநீர் முழுமையாக வடியாமல் உள்ளது. கடந்த ஒரு வாரமாக இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி, குடியிருப்புகளை சூழந்துள்ள மழைநீரை துரிதமாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.