உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு ஏரி தூர் வாராததால் மீன்வளம்... பாதிப்பு!:மிக்ஜாம் மழையால் மணல் திட்டுகள் அதிகரிப்பு

பழவேற்காடு ஏரி தூர் வாராததால் மீன்வளம்... பாதிப்பு!:மிக்ஜாம் மழையால் மணல் திட்டுகள் அதிகரிப்பு

பழவேற்காடு:பழவேற்காடு ஏரி துார் வாரப்படாமல் இருப்பதால், படிப்படியாக அதன் ஆழம் குறைந்து, மணல் திட்டுகள் அதிகரித்ததுடன், மீன்வளம் குறைந்து, மீனவர்கள் வாழ்வாதாதாரம் பாதித்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில், 40 மீனவ கிராமங்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. பழவேற்காடு ஏரியானது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக, ஆந்திர மாநிலம் வரை பரவி உள்ளது. ஏரிக்கு, ஆரணி ஆறு மற்றும் பகிம்ஹாம் கால்வாய் வழியாக நன்னீர் மற்றும் முகத்துவாரம் வழியாக கடல் நீர் வரத்து உள்ளது.பழவேற்காடு ஏரியில் கிடைக்கும் மீன், இறால் வகைகள் நல்ல சுவையுடன் இருப்பதால், இவற்றிற்கு கிராக்கி அதிகம்.மீன்பிடி தொழில் தவிர்த்து, பழவேற்காடு ஏரியானது, பல்வேறு வகையான பறவைகளை கொண்ட சரணாலயமாகவும் திகழ்கிறது.பல்வேறு பண்புகளை கொண்ட பழவேற்காடு ஏரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு பின், துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஏரியில் மணல் திட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.கடந்த மாதம் 'மிக்ஜாம்' புயலின்போது, ஏரிக்கு அதிகளவில் நீர்வரத்து இருந்தது. ஏரியின் ஆழம் குறைவாக இருந்ததால், அதை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது. துார்ந்து கிடந்த முகத்துவாரம் ஏரிக்கு வந்த அதிகப்படியான நீர்வரத்தால், மணல் திட்டுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஏரியில் தேங்கிய மழைநீர் முழுதும், அடுத்த மூன்று தினங்களில் கடலுக்குள் சென்றது. அடுத்தடுத்த நாட்களில் ஏரியில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்தது.தற்போது, ஆங்காங்கே மீண்டும் மணல் திட்டுகள் காணப்படுகின்றன. ஏரியின் ஆழமும், 15ல் இருந்து, 3 மீட்டராக குறைந்துள்ளது. சில இடங்களில், 1 மீட்டருக்கும் குறைவாக உள்ளது.நீர்வரத்து குறைவதால் மீன்வளமும், அதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதித்து வருகிறது. ஏரியை துார்வாரி ஆழப்படுத்திட வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க செயலர் துரை.மகேந்திரன் தெரிவித்ததாவது:ஏரியில் அதிகரித்து வரும் மணல் திட்டுகளால், படகுகளை இயக்குவது கடினமாக உள்ளது. மீனவர்கள் தங்களுக்கு என குறிப்பிட்ட இடங்களில் 'பாடு' முறையில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.மணல் திட்டுகள் அதிகரிப்பதால், மீனவர்கள் மாற்று இடங்களில் மீன்பிடிக்கும் போது, மீனவர்களுக்குள் தேவையற்ற சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஏரியின் ஆழம் குறைவாக இருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்து பாதிப்புகளை உண்டாக்குகின்றன. ஒடிசா மாநிலத்தில் உள்ள சில்கா உவர்ப்பு நீர் ஏரியை மத்திய - மாநில அரசுகள் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் துார்வாரி பராமரிக்கின்றன. அதேபோல், தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ஏரியை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கான்கிரீட் தடுப்புச்சுவர்

மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் குவிந்து அடைப்பு ஏற்படாமல் இருந்தால், ஏரிக்கு சீரான நீர்வரத்து இருக்கும். மணல் திட்டுகள் குவியாத வகையில், நிரந்தர முகத்துவாரத்திற்காக கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அதற்காக மத்திய வனத்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதால், அடுத்த சில தினங்களில் பணிகள் துவங்க உள்ளோம். ஏரியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றுவது தொடர்பாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை