| ADDED : நவ 23, 2025 03:27 AM
திருத்தணி: வள்ளியம்மாபுரத்தில் சாலை நடுவே மின்கம்பம் நடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி, வள்ளியம்மாபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்ய கம்பங்கள் நடப்பட்டுள்ளன. வள்ளியம்மாபுரம் பெட்ரோல் பங்க் எதிரே செல்லும் சாலை நடுவே மின்கம்பம் நடப்பட்டு, வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. சாலை நடுவில் மின்கம்பம் நடப்பட்டுள்ளதால், அவ்வழியாக வேன், கார், லாரி போன்ற வாகனங்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றன. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களுக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடமாற்ற உத்தரவிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.