| ADDED : ஜன 27, 2024 11:20 PM
சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து அரக்கோணத்திற்கு தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சோளிங்கரில் இருந்து சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்வோர், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு பேருந்தில் வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து ரயிலில் பயணிக்கின்றனர். சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில், எஸ்.பி.ஐ., வங்கி எதிரே, எதிரில் வரும் வாகனங்கள் புலப்படாத அளவிலான வளைவுகள் உள்ளன.இதனால், விபத்து நேரிடும் அபாய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் ஐந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.மலைக்கோவில் மற்றும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்வோரால், எந்நேரமும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, எஸ்.பி.ஐ., வங்கி எதிரே, தார் சாலையை ஒட்டி, வடமாநில நபர்கள் சிலர் இரும்பு தளவாட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், இவ்வழியாக நடந்து செல்வோர் போதிய இடவசதி இன்றி விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். சாலையோர கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.