உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேக்கம் 5வது நாளாக வாகன ஓட்டிகள் அவதி

 நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேக்கம் 5வது நாளாக வாகன ஓட்டிகள் அவதி

கும்மிடிப்பூண்டி: தாமரை ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதால், ஐந்தாவது நாளாக துர்நாற்றம் வீசும் தொழிற்சாலைகளின் கழிவுநீர், தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டியில், 48 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரை ஏரி, நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொழற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர், ஏரியில் கலந்து ஏரி நீர் முற்றிலும் மாசடைந்தது. இதனால், கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கும் நீர்வரத்து கால்வாயை, ஐந்து நாட்களுக்கு முன் நீர்வளத்துறையினர் மூடினர். கால்வாய் மூடப்பட்ட தால், மழைநீர் மற்றும் தொழிற்சாலைகளின் துர்நாற்றம் வீசும் கழிவு நீர் கடந்து செல்ல வழியின்றி, ஐந்தாவது நாளாக தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள், கழிவுநீரில் மிதந்தபடி செல்கின்றன. பல வாகனங்களின் இன்ஜின் பழுதாகி நிற்கின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிப்காட் தொழிற்சாலைகளில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. தொழிற்சாலைகளின் கழிவுநீரை தடுத்து நிறுத்தியதன் மூலம், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவது நியாயமா என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், இந்த பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை