மின் ஊழியர்கள் அலெர்ட் அறிவுறுத்தும் அதிகாரிகள்
திருவாலங்காடு: மழையின் போது மின்பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பருவமழை துவங்கியுள்ளதால், அவ்வப்போது, மின் சப்ளையில் தடங்கல் ஏற்படுகிறது. காற்று பலமாக வீசும் போதும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போதும் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்படும். இரு தினங்களுக்கு முன் பெய்த மழையால், சில வீடுகளுக்கான மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இந்நிலையில், மழையின்போது ஒயர்மேன்கள், போர்மேன்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் பழுதுநீக்க பணியில் ஈடுபட்டால், மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பருவமழை காலத்தில், மின்கம்பங்களில் பழுது நீக்கம் செய்ய ஏறும் மின்வாரிய ஊழியர்கள், மின்சாரம் பாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் பழுது நீக்க முயற்சிக்கும் போது, அந்தந்த டிரான்ஸ்பார்மரில் மின்சப்ளையை நிறுத்தியதை உறுதி செய்த பின்பே, கம்பங்களில் ஏறி, பழுது நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் உரிய உதவியாளர்கள் மற்றும் அலுவலர்களின் ஆலோசனையின்றி பழுது நீக்க பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.