திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள், 10க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பூமிதான திட்டத்தில், நரிக்குறவர்களாகிய எங்களது, 9 பேர் குடும்பத்தினருக்கு, ஐந்து ஏக்கர் நிலம், விவசாய பயன்பாட்டிற்காக, கடந்த, 1971, ஜூலை 2ல் தமிழக அரசு வழங்கியது. இந்நிலையில், சிரஞ்சீவி ஆகிய எனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட, 2 ஏக்கர் நிலம், எனது பாட்டனார், கூடூர் சிங் பெயரிலும், அவரது மறைவிற்கு பின், எனது தந்தை சீராளசிங் அனுபவத்தில் இருந்தது. வறுமை காரணமாக, நான் எங்கள் குடும்பத்துடன், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு பிழைப்பு தேடி சென்று விட்டேன். இந்நிலையில், எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்ட, 2 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, விற்பனை செய்ய முயற்சித்து, சுற்றுச்சுவர் கட்டி உள்ளனர்.அரசால் வழங்கப்பட்ட, பூமிதான நிலத்தை யாரும் வாங்கவோ, விற்கவோ எவ்வித உரிமையும் கிடையாது. எனவே, எங்களையும், அரசையும் ஏமாற்றி, முறைகேடாக ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.