| ADDED : நவ 24, 2025 04:12 AM
பொன்னேரி: ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு பகுதியில், இளைஞர்கள் ஆபத்தான முறையில் மீன்பிடித்து வருவதால், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போலீசார் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் பிச்சாட்டூர் அணைக்கட்டு திறப்பு ஆகியவற்றால், ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றின் பல்வேறு இடங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. லட்சுமிபுரம் அணைக்கட்டும் நிரம்பி, விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதை பார்வையிடுவதற்காக, குழந்தைகளுடன் பெற்றோர் வந்து செல்கின்றனர். இளைஞர்கள் சிலர், அணைக்கட்டு கட்டுமானங்களில் மீது அமர்ந்து, ஆபத்தான முறையில் மீன்பிடித்து வருகின்றனர். மேலும், தவறி விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், அங்குள்ள பார்வையாளர் மாடத்தின் இரும்பு கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளது. அதன் மீது பார்வையாளர்கள் நிற்கும்போது, அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நீர்வள ஆதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர், அணைக்கட்டு பகுதியை கண்காணித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.