ஊத்துக்கோட்டை:தமிழக முதல்வர் துவக்கி வைத்த, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம், நடைமுறைக்கு வந்தது. மக்கள் முகாம்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆய்வு
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை, கடந்த நவ., 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டம், அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறும். இதில், முகாம் நடக்கும் தாலுகா குறித்த தகவல் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், முகாம் நடைபெறும் அன்று, காலை 9:00 மணி முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை, கலெக்டர் மற்றும் மற்ற உயர் அதிகாரிகள், அந்தந்த தாலுகாவில் தங்கி, பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்முதலாக, ஊத்துக்கோட்டை தாலுகாவில் நேற்று காலை துவங்கியது. கலெக்டர் பிரபுசங்கர் பூண்டி ஒன்றியம், கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அதிருப்தி
அங்கு, உள்நோயாளிகள் தங்கும் அறையில் ஆய்வு செய்தபோது, சுகாதாரமின்றி நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மேலும், ஆண் மற்றும் பெண்களுக்கு ஒரே வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த கலெக்டர், 'ஏன் இப்படி மொத்தமாக நாற்காலிகளை வைத்துள்ளீர்கள். ஆண் - பெண்களுக்கு தனியாக வார்டு இல்லையா' எனக் கேட்டார். 'போதிய அறை வசதி இல்லை' என, மருத்துவர்கள் தெரிவித்தனர். 'கூடுதல் கட்டடம் வேண்டும்' என, அறிக்கை அனுப்புங்கள் என்று கலெக்டர் கூறினார். பின், சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறையில் பாடம் நடத்தினார். இதையடுத்து, மாணவர்களிடம் பேசும்போது, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் இதுவரை வழங்காதது தெரியவந்தது. உடனடியாக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குமாறு கூறினார். அதன்பின், அங்கன்வாடி மையத்திற்கு சென்று, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டார். உத்தரவு
இதைத் தொடர்ந்து, பெரிஞ்சேரி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, இருப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வேலை செய்யவில்லை. மேலும், அரிசியின் தரத்தை சோதனை செய்து, தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். பின், பெரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள கழிப்பறை சுத்தமாக இருந்ததை தொடர்ந்து, தலைமையாசிரியரை பாராட்டினார். மாலை ஊத்துக்கோட்டை தாலுகாவில் அனைத்து அரசு அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் பேசுகையில், 'பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் திட்டங்கள் தாமதம் இன்றி சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினார். அதன்பின், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.