உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில்வே பாலத்திற்கு இணைப்பு சாலை பணி துவக்கம்: திருத்தணியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

ரயில்வே பாலத்திற்கு இணைப்பு சாலை பணி துவக்கம்: திருத்தணியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக கடந்த, 2008ம் ஆண்டு, 47 கோடி ரூபாய் மதிப்பில், நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு திட்டமிட்டது.கடந்த, 2012ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தி வழங்கியதற்காக, நெடுஞ்சாலை துறை, 11 கோடி ரூபாயை மாவட்ட வருவாய் துறையினருக்கு வழங்கியது.

புறவழிச்சாலை

பின், 2013ம் ஆண்டு சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அரக்கோணம் சாலைக்கு, 30 மீ., அகலம், 3.24 கி.மீ., துாரத்திற்கு, 36 கோடி ரூபாய் மதிப்பில், புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. கடந்த, 2019ல், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், தார்ச் சாலை வசதி ஏற்படுத்தினர்.மேலும், பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே, 5 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம், எம்.ஜி.ஆர்., நகர் அருகே, 10.50 கோடி ரூபாயில் நெடுஞ்சாலை துறையினர் ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் உயர்மட்ட பாலம் கடந்த, 2020ம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் ரயில்வே நிர்வாகம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மேம்பாலம், 16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணிகள் துவங்கி நவம்பர் மாதத்தில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் ரயில்வே மேம்பாலத்திற்கு இருபுறமும் இணைப்பு சாலை அமைப்பதற்கு, கடந்த, 2018ம் ஆண்டு திட்ட மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

கிடப்பில் பணி

ஆனால் பழைய விலை மதிப்பில் இணைப்பு சாலை பணிகள் தொடர முடியாது என ஒப்பந்ததாரர் கூறியதால் இணைப்பு சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், கடந்த ஜனவரி மாதம் புறவழிச்சாலை திறப்பு தள்ளிப்போனது. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறையின் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, 1.30 கோடி ரூபாய் மதிப்பில் இருபுறமும் 9 மீட்டர் நீளத்திற்கு இணைப்பு சாலை அமைப்பதற்கு டெண்டர் விட்டனர். தற்போது பணிகள் துரித வேகத்தில் நடந்து வருவதால் அடுத்த மாதத்தில் புறவழிச்சாலை வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு தெரிவித்தார். இதனால் திருத்தணி நகரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புறவழிச்சாலை பயன்கள்

திருத்தணியில் புறவழிச்சாலை அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் திருத்தணி நகரத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து திருத்தணி நகர் வழியாக காஞ்சிபுரம், திருப்பதி, சித்துார் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் திருத்தணி பஜாரில் செல்வதற்கு சிரமப்படுகின்றன. புறவழிச்சாலையால் எளிதாக கனரக வாகனங்கள் செல்ல முடியும். திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக செல்வதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைவர். திருத்தணி நகரில் முருகன் கோவில் உள்ளதால் முக்கிய விழா நாட்களில் பஜாரில் அரை கிலோ மீட்டர் துாரம் வாகனங்கள் கடப்பதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்த்து எளிதாக வாகனங்கள் செல்ல முடியும்.

திருத்தணி, பிப். 6---

திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 36 கோடி ரூபாயில் அமைக்கும் புறவழிச் சாலை பணியில், ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. தற்போது பணிகள் துரித வேகத்தில் நடப்பதால் வரும் மார்ச் மாதத்தில் வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை