| ADDED : பிப் 10, 2024 08:43 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் உழவர் சந்தை அருகில், தொடரும் ஆக்கிரமிப்பால், ஜெ.என்., சாலையில் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.திருவள்ளூர் ஜே.என்., சாலையில், தீயணைப்பு நிலையத்தில் இருந்து உழவர் சந்தை, காமராஜர் சிலை வரை, சாலையின் இடதுபுறம் நடைபாதையை ஆக்கிரமித்து இளநீர், பூக்கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவற்றை வாங்க வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர்.இதனால், ஆவடி சிக்னலில் இருந்து உழவர் சந்தை வரும் தினமும் நெரிசல் நீடிக்கிறது. பொதுமக்களுடன், கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர் வரை, பல மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த நெரிசலுக்கு தப்புவதில்லை.அவ்வப்போது, நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பை அகற்றினாலும், சில நாட்களில் மீண்டும் கடைக்காரர்கள் கடை விரிக்கின்றனர். இதனால், உழவர் சந்தை அருகில், எப்பொழுதும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை கலெக்டர் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.