உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்

திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலில், வரும் 14ம் தேதி முதல், 18ம் தேதி வரை, ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப்பெருமானை வழிபட்டு, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர். பெரும்பாலான பக்தர்கள் காவடிகளுடன், சரவணப்பொய்கை திருக்குளம், மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய பகுதிகளுக்கு வந்து, குளத்தில் புனித நீராடிய பின் காவடிகளுக்கு பூஜை நடத்துவர். பின், மலைக்கோவிலுக்கு படிகள் வழியாக நடந்து செல்வர். இந்நிலையில், மலைப்படிகளில் சிலர் ஆக்கிரமித்து, முருகன் படக்கடைகள், பஞ்சாமிர்தம், தேங்காய், பொரி, கயிறு போன்ற பூஜை பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். படிகளில் ஆக்கிரமித்துள்ள கடைகளால், காவடிகளுடன் பக்தர்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் உத்தரவின்படி, மலைப்படிகளில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றும் பணியில், நேற்று கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், 12ம் தேதியும், மலைப்படிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார். தெப்பம் கட்டும் பணி தீவிரம் திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா, வரும் 16ல் துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. மூன்றாம் நாள் தெப்பத்துடன் விழா நிறைவடைகிறது. மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்தில், தற்போது தெப்பம் கட்டும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தெப்பத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மூன்று நாட்கள் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை