சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 600க்கும் மேற்பட்ட அரிய வகை சூறைக் குருவிகள் முகாமிட்டு இருப்பது, பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மே வரை வெளிநாட்டு பறவைகள் வருவது, ஆண்டுக்கு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் பறவைகள் குறித்து, வனத்துறையுடன் இணைந்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பு கணக்கெடுப்பு நடத்தி ஆவணப்படுத்தி வருகிறது. இந்த வகையில் இங்கு, 202 வகை பறவைகளின் வருகை பதிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சாம்பல்தலை மைனா, கருங்கொண்டை நாகணவாய், ஆசிய கருப்பு வெள்ளை நாகணவாய் போன்ற உள்நாட்டு பறவைகள் பரவலாக காணப்படுகின்றன. பருவமழை முடிந்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில், சூறைக் குருவிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும்; மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக வரும். இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, 600க்கும் மேற்பட்ட சூறைக்குருவிகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலைத்தில் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது: தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் இருந்து சூறைக் குருவிகள் வருகின்றன. கூட்டமாக, நீண்ட தொலைவுக்கு இவை பயணிக்கும். ஒரே சமயத்தில், 500 முதல் 1,000 பறவைகள் ஒன்றாக, குறிப்பிட்ட இடத்தில் பறக்கும்போது ஏற்படும் திரள் நடனம் பார்ப்போரை கவர்ந்து இழுக்கும். இதை காத்திருந்து ரசிக்கும் ஆர்வலர்கள் அதிகம் பேர் உள்ளனர். பொதுவாக, மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தபின், சேற்றில் வளரும் சிறு பூச்சிகளை உணவாக உண்டு வாழும். இதற்கான சூழல் இருக்கும் இடத்தில் மட்டுமே இவை தங்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இதற்கு முன், 2020 டிசம்பரில், 393 சூறைகுருவிகள் வந்ததே அதிகபட்சமாக கருதப்பட்டது. இந்த பின்னணில், இந்த ஆண்டு டிசம்பரில் இதுவரை, 600 பறவைகள் வந்துள்ளன. வடகிழக்கு பருவமழை முடியாத நிலையில், சூறை குருவிகள் வருகை அதிகரித்துள்ளதற்கான காரணம் குறித்து, ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.