| ADDED : ஜன 30, 2024 10:55 PM
தண்டையார்பேட்டை:காஞ்சிரம் மாவட்டம், நெமிலியை சேர்ந்தவர் சங்கர், 39. இவர் தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பு அருகே நடைபாதையில் வசித்து வந்தார். நரிக்குறவரான இவர், நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் பின்தலையில் ரத்தக் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சங்கர் உடலை கைப்பற்றிய தண்டையார்பேட்டை போலீசார், பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், சங்கர் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.சங்கரும், அதே நடைபாதையில் 10 ஆண்டுகளாக அவருடன் ஒன்றாக வசித்து வரும் சாவித்திரி, 60 என்பவரும் ஒன்றாக குடித்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சாவித்திரி தாக்கியதில் சங்கர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து சாவித்திரியை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.